மத்திய அரசின் திட்டங்கள், ஊடக அறநெறி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சவால்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாள் பயிலரங்கம், பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் நாகர்கோவிலில் ஹோட்டல் சஹானா காஸ்டலில் நடைபெற்றது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வி. பழனிசாமி இந்தப் பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இணை இயக்குநர் விஜயலெக்ஷ்மி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய தென்மண்டல தலைமை இயக்குநர் வி. பழனிசாமி, இதழியல் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் குறித்துப் பேசினார்.
“இதழியலில் தெளிவு, துல்லியம் மற்றும் துணிவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.ஊடகத்துறை சந்திக்கும் சவால்களைச் சுட்டிக்காட்டிய அவர், போலியான செய்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) உருவாகும் பல்வேறு சவால்கள் குறித்து எச்சரித்தார். “கேமராவை வைத்திருக்கும் எவரும் செய்தியாளராக முடியும். ஆனால், அறநெறி நிலைகளுடன் பணியாற்றும் ஒருவரால் மட்டுமே உண்மையான செய்தியாளராக உருவாக முடியும்,” என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பயிலரங்கில் பங்கேற்ற துறைசார் நிபுணர்கள் மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்த ஒருநாள் பயிலரங்கில் கலந்துகொண்ட 80 ஊடகவியலாளர்களுக்குப் பங்கேற்புக்கான சான்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உதவியாளர் சன்ட்ரா செபாஸ்டியன் நன்றியுரை வழங்கினார்.


















