மஹாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஆதியோகி ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார் தருமபுர ஆதீனம்

கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி விழாவினை முன்னிட்டு, தமிழகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் ‘தென் கைலாய பக்தி பேரவை’ மற்றும் தமிழகத்தின் முதன்மையான ஆதீனங்கள் ஒன்றிணைந்து நடத்தும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழகம் முழுவதும் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள இந்த ரத யாத்திரையின் ஒரு பகுதியாக, தெற்கு மண்டலத்திற்கான பயணத்தை மயிலாடுதுறையில் இன்று (23/12/2025) நடைபெற்ற மங்கல நிகழ்வில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆதியோகிக்கு தீப ஆரத்தி காட்டி, பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரத யாத்திரை என்பது வெறும் ஊர்வலம் மட்டுமல்லாது, 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்கள் ஊர் ஊராகச் சென்று சிவநெறியைப் பரப்பிய வரலாற்றுச் சிறப்பினை இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டும் ஒரு நவீன ஆன்மீகப் பயணமாகப் பார்க்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் தொடங்கிய இந்தத் தெற்கு மண்டல ரத யாத்திரை, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகப் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம், திருவேடகம், திருப்புவனம், காளையார் கோயில், திருப்புத்தூர், பிரான்மலை, திருவாடானை, ராமேஸ்வரம் ராமநாதர் கோயில், உத்திரகோசமங்கை, குற்றாலம் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் தொன்மையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களை இந்த ரதங்கள் சென்றடையும். முன்னதாக, மேற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரை கடந்த 17-ஆம் தேதி கோவை ஆதியோகி முன்பு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பொழுது அருளாசி வழங்கிய பேரூர் ஆதீனம், நாயன்மார்களின் நல்வழிப்படுத்தும் பணிகளோடு இந்த ரத யாத்திரையை ஒப்பிட்டு, இது இல்லங்கள் தோறும் ஆன்மீக ஒளியை எடுத்துச் செல்லும் உன்னதப் பணி என்று போற்றினார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சிவநாமத்தை எதிரொலிக்கச் செய்யும் இந்த ரத யாத்திரை, இறுதியாக மஹாசிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஆதியோகி சந்நிதானத்தை வந்தடையும்.

Exit mobile version