ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரமுழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அவரது தலைநகரான பாஞ்சாலங்குறிச்சியில் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் வரலாற்றுச் சிறப்புமிக்க பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் எழுப்பப்பட்ட நினைவு மாதிரிக்கோட்டையில் அமைந்துள்ள கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு, அவரது வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக, கட்டபொம்மனின் 6-வது தலைமுறை நேரடி வாரிசான மறைந்த வீமாராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்ரமணிய கட்டபொம்முதுரையின் மனைவி பேச்சியம்மாள் தலைமையில், குடும்ப உறுப்பினர்களான வீரசக்கம்மாள், ராஜமல்லம்மாள், பாஞ்சாலம்மாள், ரவீந்திரன், கணபதி ராஜா, கட்டபொம்மன், கலைமுத்து உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
தென்பாண்டிச் சீமையின் வீர வரலாற்றைப் பறைசாற்றும் இக்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவிற்காக, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாஞ்சாலங்குறிச்சியில் குவிந்தனர். கடந்த 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்ட இந்த மாதிரிக் கோட்டையானது, சிதைந்து போன கட்டபொம்மனின் பழைய கோட்டையின் நினைவாக அதே வரலாற்றுத் தடத்தில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி கட்டபொம்மன் வாரிசுகள் பேசுகையில், நாட்டின் விடுதலைக்காகத் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பாட்டனின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சமுதாய அமைப்புகளும் வரிசையாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் “வரி கொடுக்க மறுத்த” வீரக் குரல் ஒலித்த இந்த மண்ணில், அவரது வாரிசுகளே முன்னின்று நடத்திய இந்தத் தொடக்க நிகழ்வு, விழாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது…
