மாடு வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்ற மூதாட்டி தலையை துண்டித்து கொலை செய்த வியாபாரி கைது !

சேலம் : சங்ககிரி அருகே மூதாட்டியை மாடு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற வியாபாரி, அவரை கொலை செய்து, தலை மற்றும் உடலை தனித்தனியாக சாக்கு மூட்டையில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வெள்ளையம்பாளையத்தைச் சேர்ந்த சின்னபொண்ணு (வயது 70), கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். அண்மையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த மாடு வியாபாரியான ஏழுமலையிடம் மாடு வாங்கித் தருமாறு கேட்டிருந்தார்.

இதனையடுத்து, ஜூலை 23ஆம் தேதி காலை, “கொங்கணாபுரத்தில் மாடு வாங்கித் தருகிறேன்” எனக் கூறி சின்னபொண்ணுவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் ஏழுமலை. அன்று மாலை ஏழுமலை மட்டும் வீடு திரும்பினார்.

சின்னபொண்ணுவின் மகன் மதியழகன், தாயைப் பற்றிக் கேட்டபோது, “அவளை மகுடஞ்சாவடியில் உள்ள உன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்” என ஏழுமலை தெரிவித்தார். ஆனால், சகோதரியின் வீட்டில் அவர் வராதது உறுதியாகியது. அதையடுத்து பல இடங்களில் தேடியும் சின்னபொண்ணு கிடைக்கவில்லை.

இந்நிலையில், சங்ககிரி போலீஸ் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்தார். அதற்குள் ஏழுமலையின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியதால், அவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட ஏழுமலை, தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் உள்ள ஏரிக்கரையில் சின்னபொண்ணுவை கொலை செய்ததாகவும், அவரது தலை மற்றும் உடலை தனித்தனியாக சாக்குப் பையில் கட்டி வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கூறிய இடத்தில் தேடியதில் சாக்கு மூட்டையில் சின்னபொண்ணுவின் உடலும், தலைமீதும் தனித்தனியாகக் கிடைத்தது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் மற்றும் நகைக்காகவே இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version