கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த ஆர்.டி. மலையில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் தை மாதத்தில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு 64-வது ஆண்டாக வரும் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வேடிக்கை போட்டிகளை நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஆர்.டி. மலை விரையாச்சிலை ஈஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் மற்றும் கோலமாயிரம் கொண்ட பிடாரியம்மன், கரையூர் நீலமேகம் கோவில் ஆகிய தெய்வங்களின் ஆசியுடன் நடைபெறும் இந்த வீர விளையாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வாடிவாசல் அமைப்பு, காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மைதானம், வீரர்களுக்கான பாதுகாப்பு வசதிகள், கேலரி உறுதித்தன்மை மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்குச் சப்-கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை விழாக்குழுவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், காளைகளுக்கும் வீரர்களுக்கும் போதிய மருத்துவ வசதிகளைச் சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் குளித்தலை டி.எஸ்.பி. செந்தில்குமார் பங்கேற்றுப் பாதுகாப்புப் பணிகள் குறித்தும், போக்குவரத்துச் சீரமைப்பு குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். குளித்தலை வட்டாட்சியர் (தாசில்தார்) இந்துமதி, தோகைமலை காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்து, விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நில அளவை மற்றும் இதர சட்டப்பூர்வ ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். 64 ஆண்டுகளாகப் பாரம்பரியம் மாறாமல் நடைபெறும் இந்தப் போட்டியில் கரூர் மட்டுமன்றி திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகளும், வீரர்களும் பங்கேற்க உள்ளதால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கி உள்ளனர்.
















