முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மு. தம்பிதுரை பத்திரிகையாளர் சந்திப்பில் பேச அனுமதிக்கப்படாத சம்பவத்தை “மிகப்பெரிய இழுக்கு” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்பது மாபெரும் மக்கள் இயக்கம். முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்ததற்கு காரணம், தலைமைப் பண்பு மிக்க எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் தான்.
தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அனைவரையும் துணையாகக் கொண்டு செயல்படும் பண்பு தான் தலைமைக்கான அடையாளம். ஆனால், தற்போதைய எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையில் கட்சி அந்தப் பண்பை இழந்து, தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற பிறகு அவரது காரில் ஏற அனுமதிக்கப்படாமல், வேறு காரில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்ட சம்பவத்தையும், பத்திரிகையாளர் சந்திப்பில் தம்பிதுரை பேச முயன்றபோது வாய்ப்பு மறுக்கப்பட்ட சம்பவத்தையும் உதாரணமாகக் கூறினார்.
“இந்த இரு காட்சிகளும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அவமரியாதையாக அமைந்தன. இதுபோல் வெளியில் தெரியாத பல சம்பவங்கள் உள்ளன” என அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் குறிவைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் எனவும்,
“திருவள்ளுவர் கூறியது போல, செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல்பட வேண்டும். இதற்கு மாறாக நடக்கும் எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்” எனவும் ஓ. பன்னீர்செல்வம் எச்சரித்தார்.
