சென்னை :
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அதே கட்சியில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால், எந்த நிபந்தனையும் விதிக்காமல் தாம் அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
இந்த சந்திப்பில், செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு, முன்னாள் பொது செயலாளர் சசிகலா மற்றும் அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
அரசியல் எதிரொலி :
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவும் அதிமுகவுமாக கூட்டணி அமைத்த நிலையில், ஓபிஎஸ் எடுத்துள்ள இந்த முறைமை எதிர்கால அரசியல் சந்திப்புகளுக்கு அடித்தளமா என்பதுதான் தற்போது எழும் முக்கியக் கேள்வியாக உள்ளது.
ஓபிஎஸ் அதிமுகவிற்கு திரும்பும் வாய்ப்பை நேரடியாக உறுதி செய்துள்ள இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களை உருவாக்கக்கூடியதாயிருக்கலாம் என வட்டாரங்கள் கருதுகின்றன.