கோவை: கோவையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுவன் ஒருவரை பெல்ட்டால் தாக்கிய கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய காப்பக உரிமையாளர் செல்வராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் “கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற பெயரில் இயங்கும் இந்த காப்பகத்தில் சுமார் 26 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அங்கு வசிக்கும் ஒரு சிறுவனை உரிமையாளர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோவில், சிறுவனை தாக்கியதுடன் மிரட்டலும் விடுக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது. அப்போது அருகில் இருந்த மற்றொரு சிறுவன் பயந்து நடுங்கியவாறு அந்தக் காட்சியை பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து, காப்பகத்தில் வசிக்கும் பிற குழந்தைகளின் நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அக்காப்பகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் பணம் உண்மையில் குழந்தைகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
தற்போது, செல்வராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அங்கு பணியாற்றும் 9 ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையமும் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
