“இனி, திருட ஒன்றுமில்லை ; உடல் உறுப்புகளைத் திருடுகிறது தி.மு.க. அரசு” – பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

கோவை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியபோது, தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:
“வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தி.மு.க. கூட்டணி பலமாக இருந்தாலும், அ.தி.மு.க. கூட்டணி மக்களுடன் உள்ளது. மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசுதான் தேவை.

தி.மு.க. எப்போதும் ஆட்சிக்கு வந்தாலும், ஊழல் செய்வதே அதன் முதல் பணி. கருணாநிதி காலத்திலிருந்தே இதுதான் நடந்து வருகிறது. ஊழல் இல்லாத துறை தமிழகத்தில் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் அரசாக தி.மு.க. மாறியுள்ளது. விவசாயிகள் நிலத்தின் மண்ணை எடுத்ததற்கே வழக்குகள் போட்டுள்ளனர். அவர்கள் கேட்கும் உரிய விலையையும் வழங்கவில்லை.

மா. சுப்பிரமணியன் துறையில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. அனைத்தையும் திருடிவிட்டதால், இனி திருட ஒன்றுமில்லாமல் மக்கள் உறுப்புகளைப் பறிக்கத் தொடங்கி விட்டனர். வறுமையை பயன்படுத்தி ஏழைகளை கொடுமைப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கேவலமானது தி.மு.க. அரசு.

தமிழகத்தில் 6,000 மதுக்கடைகள் உள்ளன. அதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் 67% உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100% உயர்த்தப்பட்டு, குடிநீருக்கும் குப்பைக்கும் கூட வரி விதித்துள்ளனர்.

ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க. ஆட்சியில் ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டரீதியாக தண்டனை வழங்கப்படும். கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியது அ.தி.மு.க. அரசு. திறமையான மாணவர்களை உருவாக்குவோம். அதோடு, அ.தி.மு.க. ஆட்சியில் கோவை, மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்படும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது, தமிழக மக்களுக்குக் கிடைத்த பெருமையாகும். குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு தனித்துவமான பெருமை உண்டு,” என பழனிசாமி உரையாற்றினார்.

Exit mobile version