“பழைய, புதிய எதிரிகள் எவராலும் திமுகவைத் தொட்டுக் கூட முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொடக்கூட முடியாது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் மாநகரில் நடைபெறவுள்ள திமுகவின் முப்பெரும் விழா குறித்து தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் நினைவுகூரும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த விழா, திராவிட இயக்கத்தின் கொள்கை இலட்சியங்களை நிலைநிறுத்தும் திருவிழா என்றும், “நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்; கூட்டம் முடிந்ததும் இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்” என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், இளைஞரணி செயலாளராக பேரணிகளை வழிநடத்திய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், இந்த விழா கடந்த சாதனைகளை நினைவு கூர்ந்து, எதிர்காலப் பயணத்திற்கான பாசறை எனக் குறிப்பிட்டார்.

விருதுகள் வழங்கல்

இந்த ஆண்டு விழா கரூர் புறவழிச்சாலையிலுள்ள கோடாங்கிப்பட்டியில் மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. துரைமுருகன் தலைமையிலான இந்த விழாவில் பல்வேறு முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன:

பெரியார் விருது – கனிமொழி கருணாநிதி எம்.பி.

அண்ணா விருது – சுப. சீதாராமன்

கலைஞர் விருது – சோ.மா. இராமச்சந்திரன்

பாவேந்தர் விருது – அமரர் குளித்தலை சிவராமன் குடும்பத்தார்

பேராசிரியர் விருது – மருதூர் இராமலிங்கம்

மு.க.ஸ்டாலின் விருது – பொங்கலூர் ந. பழனிசாமி

முரசொலி செல்வம் விருது – மூத்த பத்திரிகையாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வன்

உறுதிமொழி நிகழ்வு

செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தின் கீழ், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சாதனைகள் – எதிர்கால பாதை

திமுக ஆட்சியில் தமிழ்நாடு மருத்துவம், தொழில், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட சாதனைகள் ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முப்பெரும் விழா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வெற்றிப் பயணத்தின் முன்னோட்டமாக அமையும் என்றும், தொண்டர்கள் ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version