தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில், திமுக கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி பதவியை இழந்துள்ளார். சொந்தக் கூட்டணியில் இடம் பெற்ற உறுப்பினர்கள் உட்பட, பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
30 வார்டுகள் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில், அதிமுகவைச் சேர்ந்த 13, திமுக – 9, ம.தி.மு.க – 2, காங்கிரஸ் – 1, எஸ்.டி.பி.ஐ – 1, சுயேட்சை – 4 என மொத்தம் 30 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
முந்தைய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது, திமுக கூட்டணிக்கும் அதிமுகக்கும் சமமான வாக்குகள் (15-15) கிடைத்தன. இதனால் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தப்பட்டு, திமுக சார்பில் உமா மகேஸ்வரி தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், பின்னர் டெண்டர் முறைகேடு, மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கடந்த மாதம் 2ம் தேதி, திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 நகர்மன்ற உறுப்பினர்கள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. அதில், 28 உறுப்பினர்கள் தலைவிக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்தும் இன்று, நகர்மன்றத் தலைவர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.