சென்னை: புதிதாக அரசியல் களத்தில் இறங்கியவர்களாலும், ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களாலும் திமுகவை வீழ்த்த முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு திமுக தலைமையிலான கூட்டணிக்கே இருப்பதாக அவர் உறுதிபட கூறினார்.
தமிழ்நாட்டில் மது ஒழிப்பை வலியுறுத்தி, ஜனவரி 2 முதல் திருச்சியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் அழைப்பிதழை வழங்கினார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகப்போவதாக பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் தொடர்வதாக வைகோ உறுதி செய்திருந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும், திமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். “இந்த கருத்தை நான் ஆரம்ப காலம் முதலே தொடர்ந்து கூறி வருகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும், எத்தகைய அரசியல் அறைகூவல்கள் எழுப்பப்பட்டாலும் மக்கள் மனதில் திமுக கூட்டணிக்கே ஆதரவு இருப்பதாக வைகோ கூறினார். காலை உணவுத் திட்டம், விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் திமுக அரசின் முக்கிய சாதனைகளாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருவண்ணாமலையில் திமுக நடத்திய இளைஞரணி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றதாகவும், அதுபோல ஜூனியர் உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து நேரில் சென்று பார்த்ததாகவும் வைகோ தெரிவித்தார். இதனால் திமுக மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அர்த்தமற்றதாகி விடும் என்றார்.
புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாக இருந்தாலும், தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர்களாக இருந்தாலும், திமுகவை வீழ்த்துவது சாத்தியமில்லை என வைகோ தெரிவித்தது, நடிகர் விஜயை மறைமுகமாக சாடியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
