நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மற்றும் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில், ஆங்கிலப் புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டுச் சிறப்புத் திருவிழா மற்றும் தேர்பவனி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு முழுவதும் தங்களுக்குப் பாதுகாப்பாகவும் துணையாகவும் இருந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பிறக்கின்ற புத்தாண்டு வளமான ஆண்டாக அமைய வேண்டியும் ஆண்டுதோறும் இந்தச் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆலயப் பங்குத்தந்தை டேவிட் செல்வகுமார் தலைமையில் சிறப்புத் திருப்பலி (Mass) நடைபெற்றது. இதில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பலியைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்பவனி நடைபெற்றது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய மாதா மற்றும் புனித அந்தோணியார் ஆகிய திருவுருவச் சொருபங்கள் எழுந்தருளின. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்தத் தேர்பவனி, கருங்கண்ணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வலம் வந்தது.
தேர் சென்ற வீதிகள் எங்கும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் புனிதர்களை வழிபட்டனர். மீண்டும் தேர்பவனி ஆலயத்தை வந்தடைந்ததும், விண்ணைப் பிளக்கும் வகையில் வண்ணமிகு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் மிகச் சிறப்பம்சமாக, இப்பகுதியின் பாரம்பரியமான மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில், அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உண்ணும் சிறப்புச் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. சாதி, மத பேதமின்றிப் பொதுமக்கள் அனைவரும் இந்த உணவைப் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கீழையூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.
