பாட்னா : சமீபகாலமாக புதிதாக திருமணமான பெண்கள், தங்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன்மாரை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், பீகாரில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சா என்ற பெண், கடந்த மே மாதம் பிரியான்ஷு என்ற இளைஞரை குடும்ப ஒப்புதலுடன் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான 45 நாட்களுக்குள், கணவனைப் பிரிக்க திட்டமிட்ட குஞ்சா, தனது மாமா உறவுமுறையில் வருபவரான ஜீவன் சிங்குடன் சேர்ந்து கொலை சதியை திட்டமிட்டுள்ளார்.
திட்டமிட்ட கொலை:
ஜூன் 24ஆம் தேதி இரவு, நபிநகர் லெம்போகாப் பகுதியில், பிரியான்ஷு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசாருக்கு, குஞ்சா மற்றும் ஜீவன் சிங்கின் தொடர்புகள் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்தன.
மாவட்ட எஸ்.பி. அம்ப்ரிஷ் ராகுல் வெளியிட்ட தகவலின்படி, குஞ்சா தனது மாமா ஜீவன் சிங்குடன் பல ஆண்டுகளாக தவறான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு, இந்த உறவில் இடையூறாக இருந்த கணவர் பிரியான்ஷுவை அகற்ற வேண்டும் என திட்டமிட்டு, கூலிக்கொலையாளர்களை பயன்படுத்தி அவரை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
பொறுப்பை ஒப்புக்கொண்ட மனைவி:
விசாரணையில் குஞ்சா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜீவன் சிங்கும், கூலிக்கொலைக்காரர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து திட்டமிட்டு இந்த கொலையை ஏற்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குஞ்சா சிங், ஜீவன் சிங் மற்றும் மற்றொரு நபர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.