மீண்டும் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் பலருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஆறு ஆண்டுகள் ஆனாலும், அதன் உருமாற்றம் பெற்ற புதிய வகைகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. அதில், கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட XFG வகை கொரோனா வைரஸ், அமெரிக்காவின் அலாஸ்கா, நியூயார்க், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாவது :

“இந்த புதிய வகை, ஏற்கனவே அறியப்பட்ட சார்ஸ் வகையைச் சேர்ந்தது. இது அதிகமான சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். சாதாரண சளி மருந்துகள் மூலம் அறிகுறிகளை குறைக்கலாம். தேவையானவர்களுக்கு ஐசியு சிகிச்சை அளித்தால், பொதுவாக 5 நாட்களில் குணமடையலாம்.”

இந்த XFG வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஏற்கனவே காணப்படுவதாகவும், தடுப்பூசி எடுத்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், எந்த வகை தொற்றாக இருந்தாலும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி சோப்புடன் கைகளை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட உடனிருக்கும் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும்வர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version