வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு ; தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகம் வரும் செப்டம்பர் 25 முதல் 27 வரை கனமழைக்கு உள்ளாகும் என்று சென்னை வானிலை மையம் முன்கூட்டியே அறிவித்துள்ளது.

அறிக்கையின் படி, தமிழக தென்மாவட்டங்களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மத்திய ஆந்திரப் பகுதிகளில் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி செயல்பட்டு, வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு செப்டம்பர் 27 அன்று ஒடிசா மற்றும் ஆந்திர கடலோரம் கடந்து செல்லும் என வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது. அதன்படி, தமிழகத்தின் சில வடமாவட்டங்களில் மற்றும் தென்மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் செப்டம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 26 அன்று தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும், சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version