சொத்து அபகரிப்பு நோக்கில் சித்தப்பாவை கொலை செய்து, தற்கொலை போல நாடகமாடிய அண்ணன் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே முண்டாச்சியூர் காட்டுவளவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (47). திருமணம் ஆகாத இவர் கூடை பின்னும் தொழில் செய்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, முப்பனூர் அருகே உள்ள கள்ளுக்கடையில் சுரேந்தர் என்பவரின் விவசாய கிணற்றில் ராமச்சந்திரனின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தெரியவந்தது: ராமச்சந்திரனுக்கும், அவரது அண்ணன் ராஜமாணிக்கத்துக்கும் தலா 1.5 ஏக்கர் நிலம் இருந்தது. ராஜமாணிக்கம் இறந்ததால், அவரது மகன் பிரகாஷ் (34) அந்த நிலத்தை விற்றுவிட்டார். பின்னர், சித்தப்பா ராமச்சந்திரனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
திருமணம் ஆகாத ராமச்சந்திரன் தனது நிலத்தை சகோதரிகளுக்கு பாதி கொடுத்து, மீதியை விற்று பணத்தை வைத்துக் கொள்வதாக பேசியதால், சொத்து தமக்கே வந்து சேர வேண்டும் என்ற பேராசையில் பிரகாஷ் திட்டமிட்டார்.
கடந்த 26ஆம் தேதி, ராமச்சந்திரனை கள்ளுக்கடைக்கு அழைத்துச் சென்ற பிரகாஷ், இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்தார். பின்னர், உடலை கிணற்றில் தூக்கி வீசி, தற்கொலை செய்தது போல காட்டினார்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.