நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு நிதி அமைச்சரை பொதுமக்கள் துரத்தித் தாக்கிய காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, ஊழல், வேலைஇல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூக வலைதளத் தடை நீக்கப்பட்டாலும், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
நேற்று இரவு உள்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். இன்றோ, பிரதமர் சர்மா ஒலியின் ராஜினாமாவை கோரி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருடன் மோதிய போராட்டக்காரர்கள், கற்களை வீசி விரட்டியடித்ததுடன், நேபாள காங்கிரஸ் அலுவலகம் மற்றும் பல அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். முன்னாள் பிரதமர் பிரசன்டாவின் வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. பிரதமர் சர்மா ஒலியின் வீடும் தீக்கிரையான நிலையில், அவர் இன்று பதவி விலகியதாக அறிவித்தார்.
இந்த சூழலில், நிதி அமைச்சர் பொதுமக்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார். உயிர் தப்பும் வகையில் ஓட முற்பட்ட அவரை போராட்டக்காரர்கள் துரத்தி தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
















