சென்னை: அதிமுக முன்னாள் பிரமுகரும், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட நெல்லை வெண்மதி, இனி அவரிடமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைந்த காலத்தில் நெல்லை மாவட்ட ஐடி விங் செயலாளராக பணியாற்றிய வெண்மதி, பின்னர் பிளவு ஏற்பட்டபோது சசிகலாவின் நிழல் போல் இணைந்து செயல்பட்டவர். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் எப்போதும் அருகில் இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா அளித்த பேட்டியின் போது வெண்மதி காட்டிய முகபாவனைகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது, சசிகலாவின் பேச்சை விட அவரின் எக்ஸ்பிரஷன்களே அதிகம் பேசப்பட்டதால், பல மீம்ஸ்களும் பரவின. இதனால் பொதுமக்களிடையே வெண்மதி தனித்த அடையாளம் பெற்றார்.
ஆனால் பின்னர், சசிகலாவைச் சுற்றியிருந்த சிலர், “உன் ரியாக்ஷன் காரணமாக பேட்டி காமெடி போல் தெரிகிறது; இனி அருகில் நிற்கக்கூடாது” என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனை சசிகலாவிடம் பகிர்ந்தபோதும் அவர் கவனம் செலுத்தவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின் வெண்மதி, சசிகலாவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விலகினார்.
தற்போது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள வெண்மதி, “ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் பயணித்த சசிகலா மிகப் பெரிய தலைவர். அவர் எனக்கு குருவைப் போன்றவர். ஆனால் சிலரின் தலையீடு காரணமாக எனக்கு அங்கீகாரம் இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவரின் அரசியல் பாதையில் நான் உடன்பட்டிருந்தேன். ஆனால் பின்னர் சசிகலா ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுக்கவில்லை. அதிமுக பிரச்சனைகளுக்கு பாஜக தான் காரணம். எனவே தற்போது அவரின் அரசியல் பாதையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.