நெல்லை தீயணைப்புத் துறை லஞ்சப் புகார்: அதிகாரியை சிக்க வைக்க சதி

நெல்லை தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நவம்பர் 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அதிகாரியைக் சிக்க வைப்பதற்கான சதித்திட்டம் நடந்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு தீயணைப்பு அலுவலகர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சரவணபாபு என்பவர் பணியாற்றி வந்தார். சரவணபாபு லஞ்சம் வாங்குவதாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நவம்பர் 18ஆம் தேதி புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதே நாளில் மதியம் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சரவணபாபு மற்றும் செந்தில்குமார் என்ற மற்றொரு தீயணைப்புத் துறை அலுவலரிடம் இருந்து மொத்தம் ரூ.2.51 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சரவணபாபு மற்றும் செந்தில்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்த முந்தைய நாள் இரவு, ஒரு மர்ம நபர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அந்தப் பணத்தை வைத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து சரவணபாபு நெல்லை மாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இது ஒரு சதித்திட்டம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. சதித் திட்டத்தை அரங்கேற்றியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், முதல்கட்டமாக,

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு அலுவலர் ஆனந்த அவரது உறவினர் முத்துச்சுடர ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில், சிசிடிவியில் பதிவான, அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்ற மர்ம நபர், நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் நேற்று (டிசம்பர் 7) விஜய்யை இரண்டாவது கட்டமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதன் மூலம், தீயணைப்புத் துறை அதிகாரி சரவணபாபுவைக் குறிவைத்து, துறைக்குள்ளேயே உள்ள சிலர், லஞ்ச ஒழிப்புத் துறையைத் தவறாகப் பயன்படுத்திச் சிக்க வைக்க முயன்றது உறுதியாகியுள்ளது. இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version