திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நரிப்பட்டி கிராமத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை ஏமாற்றி 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (85). வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 19-ஆம் தேதியன்று முருகேசனின் மனைவி வீரநாகம்மாள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட, முருகேசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பிரியா (35) என்பவர், முருகேசன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தன்னை ஒரு அரசு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், முதியவர்களுக்கு வழங்கப்படும் அரசின் மாதாந்திர உதவித்தொகையை பெற்றுத் தருவதாகக் கூறி முருகேசனை நம்ப வைத்துள்ளார்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை வேண்டும் என பிரியா கேட்டபோது, நடக்க இயலாத நிலையில் இருந்த முருகேசன் தனது வீட்டுப் பீரோவில் ஆதார் அட்டை இருப்பதாகக் கூறியுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரியா, பீரோவைத் திறந்து ஆதார் அட்டையை எடுப்பது போல நடித்து, அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். வேலை முடிந்து வீடு திரும்பிய வீரநாகம்மாள், பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரியாவின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. உடனே தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், பல்லடத்தில் தலைமறைவாக இருந்த பிரியாவைக் கைது செய்தனர். விசாரணையில், பிரியா இதுபோன்று பல்வேறு ஊர்களில் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறிவைத்துத் திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. கைதான பிரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
