தமிழகத்தில் கனமழையால் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அறுவடை செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான நெல் மூட்டைகள் நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன என்பது மன வேதனையளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். “அறுவடை முடிந்து பல நாட்கள் ஆனபின்னரும் நெல் கொள்முதல் செய்யாத திமுக அரசு விவசாயிகளின் உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன,” என அவர் குற்றம்சாட்டினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் “நானும் டெல்டாக்காரன் தான்” என கூறி வந்த நிலையில், விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து, ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று, திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் துன்புறுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகள் விளைவித்த நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வது தான் திராவிட மாடலா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள், குறிப்பாக ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் ரூ.40 வரை கையூட்டு பெறப்படும் நிலை குறித்து சீமான் சாடினார். “அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் நெல் முதலில் கொள்முதல் செய்யப்படுகின்றது; ஆனால் ஏழை விவசாயிகளின் மூட்டைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த அவலம் முடிவடைய வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழித்து, நியாயமான விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

















