நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரங்கேறியுள்ள கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடியாகத் தலையிட்டுள்ளது. நாங்குநேரி காவல் எல்லைக்குட்பட்ட பெரும்பத்து பஜார் பகுதியில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், டீ கடை அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்களைக் கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்த்தது. இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த ஜான் (42) மற்றும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளி திருநாத் கட்டா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் நெல்சன் (58), பிரபாகரன், ராமசாமி மற்றும் ஆறுமுகம் மகன் கணேசன் (53) உள்ளிட்ட 6 பேர் பலத்த வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரைக் கைது செய்துள்ள நிலையில், இன்று காலை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கறிஞர் ஆயிரம் கே. செல்வகுமார் ஒரு முக்கிய முறையீட்டை முன்வைத்தார். வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர்ந்து வந்த வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் கொல்லப்பட்ட நிலையில், இதுவரை தமிழக அரசு சார்பில் எந்தவித நிவாரணமோ அல்லது இழப்பீடோ அறிவிக்கப்படவில்லை என்பதை அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் திக்கற்று நிற்பதைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், உரிய நிவாரணத்தை அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாங்குநேரி கொலைச் சம்பவம் மற்றும் நிவாரண உதவி தொடர்பாகத் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து உரிய அதிகாரிகளிடம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















