தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் ‘முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா – இது நம்ம ஆட்டம் 2026’ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகளை, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபடுத்தி, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்.
விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், உடல் குறைபாடுகளைத் தாண்டி விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளிகள் படைக்கும் சாதனைகள் போற்றுதலுக்குரியவை எனக் குறிப்பிட்டார். தடகளம், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினர்.

















