சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரது பெயர்கள், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பட்டியலில் ‘இறந்துவிட்டதாக’ தவறாகக் குறிப்பிடப்பட்டதால், ஆவேசமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை முற்றுகையிட்டுக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை சட்டசபைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுபவர் இந்துஜா. இவரது கணவர் ரமேஷ் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரும் சிவகங்கை சாஸ்திரி 5-வது தெருவில் வசித்து வருகின்றனர்.
சமீபத்தில், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்திற்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தை இவர்கள் பூர்த்தி செய்து, தங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் (பூத் ஆபீசர்) சமர்ப்பித்திருந்தனர். வாக்காளர்களை உறுதிப்படுத்தும் நோக்கில், நிரந்தரமாக இடம் மாற்றம் செய்தவர்கள் மற்றும் இறந்துவிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை நகராட்சி நிர்வாகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்டுகளுக்கு வழங்கியது. கட்சியின் பூத் ஏஜென்டான ரமேஷ் அந்தப் பட்டியலை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிக்குள்ளானார்.
அந்தப் பட்டியலில், அவரும், வேட்பாளரான அவரது மனைவி இந்துஜாவும் ‘இறந்துவிட்டதாக’ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்டு கொதிப்படைந்த ரமேஷ் மற்றும் இந்துஜா உட்பட நாம் தமிழர் கட்சியினர், உடனடியாகச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை முற்றுகையிட்டுக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் இருவரும் உயிரோடு இருக்கும்போது, தேர்தல் வேட்பாளரின் பெயரையும், மாநில நிர்வாகியின் பெயரையும் எவ்வாறு ‘இறந்தவர்கள்’ பட்டியலில் சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பி அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இந்தப் புகார் குறித்து எழுத்துபூர்வமாக மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், உடனடியாக அந்தப் பட்டியலில் பெயர்களைச் சரிசெய்து தருவதாகவும், அஜாக்கிரதையாகப் பணியாற்றிய அந்தப் பகுதி வாக்குச்சாவடி அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் (தற்காலிகப் பணிநீக்கம்) செய்வதாகவும் உறுதியளித்தார். அதன் பின்னரே நாம் தமிழர் கட்சியினர் சமாதானமடைந்தனர். இந்துஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆளுங்கட்சியினர் கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாகவே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான என்னையும், என் கணவர் பெயரையும் குறிப்பிட்டு இறந்தவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். இதுபோல பலரின் பெயர்களைத் தவறாக நீக்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்துக் கட்சித் தலைமையிடம் புகார் அளித்து மாநில அளவில் பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்,” என்று குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வேட்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகியின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயன்ற சம்பவம், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற முக்கியமான பணிகளில் அதிகாரிகள் மேலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
