நாமக்கல்: சென்னையில் வேலை பார்த்து வந்த 42 வயது ஐடி பெண் ஒருவரின் இரகசிய வாழ்க்கை, திருமணத்துக்கு மூன்றே நாளில் அம்பலமானது. முதல் திருமணத்தை மறைத்து நாமக்கல் பொறியாளரை மீண்டும் திருமணம் செய்த சம்பவம் திருப்பங்களுடன் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததோடு, 15 வயது மகள், 13 வயது மகன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளை பெற்றோரிடம் வைத்துவிட்டு தானாகவே சென்னையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் உறவு – உண்மையை மறைத்த பெண்
கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த 34 வயது மென்பொருள் பொறியாளருடன் அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகம் ஏற்பட்டது. அப்போது பெண் தனது உண்மையான வயதையும், முதல் திருமணத்தையும் மறைத்து:
“எனக்கு 30 வயது தான்” “இன்னும் திருமணம் ஆகவில்லை” என்று கூறியுள்ளார். இதை உண்மையாக நம்பிய பொறியாளருக்கு அவள்மீது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரின் உறவை குடும்பத்தாரிடம் கூறிய பொறியாளர், பெற்றோரை சமாதானம் செய்து நவம்பர் 30-ஆம் தேதி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில் திருமணம் செய்துள்ளார். மணமகன் வீட்டார் பலர் கலந்து கொண்ட நிலையில், பெண் பக்கம் மிகச் சிலர் மட்டுமே வந்திருந்தனர்.
திருமண புகைப்படங்களை மணமணிகள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். அதை பார்த்த முதல் கணவர் நேரே பாண்டமங்கலத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். தன் மனைவியையும் குழந்தைகளையும் கொண்டு இரண்டாவது கணவர் வீட்டிற்கு சென்ற அவர், பெண்ணை கடுமையாக திட்டியுள்ளார்.
முதல் கணவர் கூறிய தகவல்களை கேட்டதும், புதுமாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பெற்றுக்கொண்டு, “நான் ஏமாந்துவிட்டேன், இனி அவள் தேவையில்லை” என்று கூறி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
நாமக்கல்லில் மறுமணம் செய்ததை கண்டு கோபம் அடைந்த முதல் கணவரும், “அவள் குழந்தைகளோடு தனியே பார்த்துக்கொள்ளட்டும்” என்று கூறி குழந்தைகளை போலீசில் ஒப்படைத்து சென்றுவிட்டார்.
பெண்ணை குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய போலீசார், இத்தகைய தவறான செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
