தூத்துக்குடி: தமிழகத்தில் நடைபெற உள்ள அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னதாக அரசு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது திமுக அரசு அவர்களை மிரட்டி, அழுத்தம் கொடுத்து, போராட்டத்தை திசைதிருப்பி வருகிறது. நிரந்தர பணியமர்த்தலைக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில், அவர்களை அடித்து துரத்தி வீடு வரை சென்று மிரட்டியதாக குற்றம் சாட்டினார். ஆனால் இன்று அதே தொழிலாளர்களை காலை முதல் அழைத்து உணவு அளித்து சமாதானப்படுத்த முயற்சிக்கிறது என்றும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டதாக அவர் விமர்சித்தார். “முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை உரிய முறையில் இயக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு செயல்பாடும் இல்லாத இந்த விடியாத அரசுக்கு நாம் முடிவு கட்டுவோம்,” என்றார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவதைப் போல, பாஜகவும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் என தன்னம்பிக்கை தெரிவித்தார். குளத்தூர் தொகுதியில் 9,000 ஓட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

















