கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி – அயோத்தியாபுரம் சாலையில் அமைந்துள்ள நீர் தேக்கத் தொட்டி அருகே, நேற்று இரவு மர்மமான முறையில் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை அணிந்திருந்த நபர்கள் சிலர் ஒரு வேனில் சிலையை எடுத்து வந்து புதரில் வீசிவிட்டுத் தப்பியோடியதால், இது ஏதேனும் கோயிலில் திருடப்பட்ட சிலையா அல்லது கடத்தல் கும்பலின் கைவரிசையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு பாப்பம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வேன் நின்றுகொண்டிருந்தது. அதில் கோயிலுக்கு மாலை அணிந்த சீருடையில் 6-க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விசாரிக்கச் சென்றபோது, அந்த 6 பேரும் திடீரென வேனை அங்கேயே விட்டுவிட்டு இருட்டில் தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேனைச் சுற்றிச் சோதனையிட்டபோது, அருகில் இருந்த புதர் மறைவில் சுமார் 4 அடி உயரம் கொண்ட நேர்த்தியான அம்மன் சிலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தச் சிலையின் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டு, அருகில் பிளாஸ்டிக் பாட்டில்களும் கிடந்தன. இது ஏதோ சடங்குகள் செய்யப்பட்டதற்கான அடையாளமாகத் தெரிகிறது.
மீட்கப்பட்ட அம்மன் சிலையை அருகில் உள்ள கோயிலில் வைத்து வழிபட ஊர் பொதுமக்கள் முயற்சி செய்தனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சூலூர் வட்டாட்சியர் (தாசில்தார்) செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உதயகுமார் மற்றும் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலை தொன்மையானதா அல்லது அண்மையில் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் அந்தச் சிலையை முறையாக மீட்டு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அந்த 6 மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் அம்மன் சிலைகள் ஏதும் திருடுபோயுள்ளதா என்பது குறித்தும் தகவல் கோரப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட வேனின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் அரங்கேறிய இந்தச் சம்பவத்தால் பாப்பம்பட்டி கிராமமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
