மியான்மரில் நடைபெற்ற பவுத்த மத விழாவின் போது ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
சின் மற்றும் ராக்கைன் மாநிலங்களில் அரசு ராணுவத்துக்கு எதிராக அராகன் கிளர்ச்சிப் படை பல ஆண்டுகளாக தனிநாடு கோரி போராடி வருகிறது. இந்நிலையில், மத்திய மியான்மரில் உள்ள சாங் யூ நகரில் பவுத்த மத திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
அவர்களில் பலர் கிளர்ச்சிப் படைக்கு ஆதரவளிப்பவர்கள் என சந்தேகித்த ராணுவத்தினர், கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியதால், கூட்டத்தில் இருந்த மூன்றில் ஒரு பகுதி மக்கள் முன்கூட்டியே வெளியேறியிருந்தனர். இதனால் பலர் உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.