“ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதற்கான சிறந்த உதாரணம் என் வாழ்க்கை. என் வெற்றிக்குப் பின்னால் என் மனைவி இருக்கிறார்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா திருமண மாளிகையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, 15 ஜோடிகளுக்கான கூட்டு திருமண விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு, கொளத்தூர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனக்கு ஒரு புதிய ஆற்றல் கிடைக்கிறது. ‘கொளத்தூர்’ என்ற பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் நினைவுக்கு வரும். இந்த தொகுதிக்கே மட்டும் வேலை செய்தோம், மற்ற தொகுதிகளை புறக்கணித்தோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். தமிழ்நாட்டின் எல்லா தொகுதியும் நம்முடைய தொகுதிதான்” என்றார்.
மேலும், “பத்து நாளுக்கு ஒருமுறை கொளத்தூர் வந்தால்தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கிறது. முதலமைச்சராக பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைவிட, கொளத்தூருக்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகம்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் என் மனைவி துர்கா இருக்கிறார். மிசா காலத்தில் நான் பல இன்னல்களை சந்தித்தபோது, அவர் என்னை விட்டுச் சென்றிருந்தால் இன்று நான் இங்கு இருப்பேனா? அத்தனை சிரமங்களையும் தாங்கி, என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மணமக்களிடம் “மனைவி சொல்வதைக் கேட்டு, புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள்” என்று அறிவுரை வழங்கினார். பின்னர், 15 ஜோடிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.

















