கடலூர்: “அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். தனிப்பெரும்பான்மை ஆட்சி அமையும். அதில் முதல்வர் நான் தான். என் முடிவே இறுதி முடிவு!” என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் இன்று விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இ.பி.எஸ்., பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
“அ.தி.மு.க ஆட்சியில் பல நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அவை நிறுத்தப்பட்டுள்ளன. செங்கரும்பு விற்பனையை ஊக்குவித்தது நமது அரசு தான். ஆன்லைன் நெல் கொள்முதல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். முறைகேடுகளுக்கும் இடமளிக்கமாட்டோம்,” என்றார்.
பின்னர், அமித்ஷா கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்ட போது, இ.பி.எஸ். கூறினார் :
“நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அமித்ஷா கூறியது கூட்டணி ஆட்சி என்பதல்ல; அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சி என தான் கூறியுள்ளார். இக்கூட்டணிக்கு தலைமை தாங்குவது நமது கட்சியே. எனவே, முடிவை எடுப்பதும் நானே, முதல்வராகும் நபரும் நானே!”
மேலும், “ஊடகங்கள் வெறுமனே சலசலப்பை உருவாக்க விரும்புகிறீர்கள். ஆனால் கூட்டணியில் எந்தவிதமான விரிசலும் இல்லை. தெளிவான தலைமையுடன் அ.தி.மு.க. கூட்டணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்யும். நமது கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்!” எனவும் இ.பி.எஸ். உறுதியாக தெரிவித்தார்.