‘முருகனுக்கு இரு மனைவியர் இருக்கலாம், ஆனால் தீபம் ஒரு இடத்தில்தான்’ – வெடித்தது புதிய சர்ச்சை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, இந்து மத நம்பிக்கைகள் மற்றும் வரலாற்றுத் தரவுகள் குறித்த காரசாரமான விவாதமாக மாறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த விசாரணை நடைபெற்றது. இதன்போது, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முன்வைக்கப்பட்ட சில வாதங்கள், முருகப் பெருமானின் மாண்பையும், இந்து மத ஆசாரங்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோவில் நிர்வாகமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கு முறையான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றும் வாதிட்டனர். மேலும், மலைக்கு அருகில் தர்கா அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் காரணம்காட்டி அங்குத் தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவித்தது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என். ஜோதி முன்வைத்த வாதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் வாதிடுகையில், “முருகப் பெருமானுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம், அதற்காக இரண்டு இடங்களில் தீபம் ஏற்ற முடியாது; ஒரு இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் மரபு” என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ஜோதியின் இந்த ஒப்பீடு, சனாதன தர்மத்தையும், தமிழ் கடவுள் முருகனின் திருமண வாழ்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வழிபாட்டு உரிமை தொடர்பான ஒரு வழக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளைத் தாண்டி, கடவுளின் தனிப்பட்ட வாழ்வைச் சாடிப் பேசியது முறையற்றது எனப் பக்தர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், மலை உச்சியில் உள்ள தூண்கள் கார்த்திகை தீபத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல என்றும், அவை பழங்காலத்தில் முனிவர்கள் தங்கள் இரவு நேர வெளிச்சத்துக்காகப் பயன்படுத்திய தனிப்பட்ட விளக்குக் கம்பங்கள் மட்டுமே என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

வரலாற்றைத் திரித்துக் கூறும் வகையிலும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தும் தமிழக அரசு இந்துக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்க முயல்வதாக மனுதாரர் தரப்பு கடுமையாக ஆட்சேபித்தது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தின் தொன்மையைச் சிதைக்கும் வகையில் இத்தகைய “வக்கிரமான” வாதங்கள் முன்வைக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தொடர் வாதங்களால் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தற்போது ஒரு சட்டப் போராட்டமாக மட்டுமல்லாமல், மத நம்பிக்கை மற்றும் வரலாற்று உரிமைக்கானப் போராட்டமாகவும் உருவெடுத்துள்ளது.

Exit mobile version