காஞ்சிபுரம்: திருமணத்துக்கு பிறகு உண்டான கள்ளக்காதல் உறவுக்காக 2 குழந்தைகளை கொலை செய்த கொடூர வழக்கில், தாய் அபிராமி மற்றும் அவரது காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதித்து, காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் இன்று (ஜூலை 24) அதிரடி தீர்ப்பு வழங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி . இவர்களுக்குள் அஜய் (6) மற்றும் கார்னிகா (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அபிராமிக்கு, அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த உறவைத் தொடர விரும்பிய அபிராமி, குழந்தைகள் இருவரும் தடை ஏற்படுத்துகிறார்கள் என எண்ணி, அவர்களுக்கு தூக்க மாத்திரை அளவுக்கு மேல் கொடுத்து கொலை செய்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குற்றச்செயலில் ஈடுபட்ட அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தைக் குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள்மீது காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடினார்.
7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், விசாரணை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நீதிபதி, இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குழந்தைகளை கொடூரமாக பலியிடும் சம்பவங்களுக்கு எதிராக ஒரு எச்சரிக்கை தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.