திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் செல்லையா (31). இவரது மனைவி காவேரி (30). தம்பதிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி குழந்தை பிறந்ததற்கு பிறகு காவேரி மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செல்லையா, கடந்த 24ம் தேதி மனைவியை தாமிரபரணி ஆற்றில் குளிக்க அழைத்துச் சென்றார். அங்கு தாக்கி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, உடலை ஆற்றில் வீசினார். பின்னர், அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தார்.
இதையடுத்து, மூன்று நாட்களாக தீயணைப்பு படையினர் காவேரியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், நேற்று உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால், தாய் கொலை வழக்கில் தந்தை சிறைக்கு சென்றதால் மூன்று சிறு குழந்தைகளும் நிராதரவாகி விட்டனர்.
















