‘அனுமன்தான் முதல் விண்வெளி வீரர்’ அனுராக் தாக்கூரின் கருத்துக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்

மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாக்குர், பள்ளி மாணவர்கள் மத்தியில் புராணங்களை அறிவியலோடு ஒப்பிட்டுப் பேசிய கருத்து தற்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் உனாவில் உள்ள ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளியில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் நீல் ஆம்ஸ்ட்ராங் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் தான்” என்று பேசினார். மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்ட வேண்டிய விண்வெளி தின விழாவிலேயே இத்தகைய கருத்தை அவர் முன்வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சிற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் கிண்டலான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பாஜகவினரின் இத்தகைய ‘அறிவியல்’ கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்வதாக அவர் சாடியுள்ளார்.

சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (X) பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது, அனுமன் தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. பாஜகவினரின் அறிவுச் செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. அனுராக் தாக்கூரின் இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பெயரை அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்குவதற்கான சுற்றறிக்கையை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்,” என நக்கலாகக் பதிவிட்டுள்ளார்.

புராண இதிகாசங்களில் வரும் நிகழ்வுகளை நவீன அறிவியலோடு தொடர்புபடுத்திப் பேசுவது பாஜக தலைவர்களிடையே ஒரு வழக்கமாக மாறிவிட்டதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு முன்பும் விநாயகரின் தலை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’க்கு உதாரணம் என்றும், மகாபாரத காலத்திலேயே ‘இன்டர்நெட்’ வசதி இருந்தது என்றும் அக்கட்சியின் பல்வேறு தலைவர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. தற்போது விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிலவுப் பயணம் குறித்த பாடங்களில் மாணவர்கள் தெளிவு பெற வேண்டிய நேரத்தில், ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினரே இத்தகைய கருத்தைப் பேசியிருப்பது, இந்தியாவின் அறிவியல் கல்வி முறையின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாகக் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version