பாஜகவுக்கே மேல் நரேந்திர மோடியின் அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அவரில்லாமல் பாஜக 150 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்றும், ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கூறியுள்ள கருத்து, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “75 வயதைக் கடந்த தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார். இதுவே பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பரில் 75வது பிறந்த நாளை கொண்டாட உள்ள சூழ்நிலையில், அவரை குறித்தே இந்தக் கருத்து என்பதுபோல் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்வினையாக ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நிஷிகாந்த் துபே,
“பாஜக என்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நரேந்திர மோடியே! 2029ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலையும் மோடியின் தலைமையில்தான் சந்திப்போம். மோடி இல்லையெனில் பாஜக 150 இடங்களுக்கே மேல் வெற்றி பெற முடியாது,”
என கூறியுள்ளார்.
மேலும்,
“இன்றைய அரசியல் சூழலில் பாஜகவுக்குத்தான் மோடி தேவை. ஆனால் மோடிக்கு பாஜக தேவையில்லை,”
என்ற அவரது கருத்து, கட்சிக்குள் எதிரொலிக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனமாக,
“மோடியின் பேச்சு இனி அரசியல் களத்தில் தாக்கம் ஏற்படுத்தாது என்பதே ஆர்.எஸ்.எஸ்-க்கு புரிந்துவிட்டது,”
என குற்றம்சாட்டியுள்ளார்.
நிஷிகாந்த் துபேவின் இந்த கூற்று, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்குள் உள்ள நீடித்த அமைதியற்ற நிலையை வெளிக்கொணர்கிறது என அரசியல் விமர்சகர்கள் மதிக்கின்றனர்.