அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. மைத்ரேயன், கட்சியிலிருந்து விலகி, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவரான மைத்ரேயன், 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1999-ல் பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கையாளர் என அறியப்பட்ட அவர், மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து, இ.பி.எஸ். அணியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர், கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்து, அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். எனினும், கட்சியில் தன்னை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அவர், தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் சேர்ந்ததற்கான காரணத்தை விளக்கி பேசிய மைத்ரேயன்,
“மண், மொழி, மானம் காக்க தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளேன். தமிழக நலனுக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களின் நலன்களுக்காகவும் முதல்வர் செயல்படுகிறார். தளபதியின் சிப்பாய்களில் ஒருவராக சேவை செய்ய விரும்புகிறேன்,” என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்த அவர்,
“அமித்ஷா கூட்டணியை அறிவித்தார், ஆனால் எந்த அடிப்படையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்பது தெளிவாக இல்லை. அதிமுகவில் பல குழப்பங்கள் உள்ளன; பலர் மனவருத்தத்தில் உள்ளனர்,” என்றும் தெரிவித்தார்.