“தி ரைஸ் – சங்கம்-5” உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்தார் ஆ.ராசா எம்.பி!

தூங்கா நகரமான மதுரையில், உலகெங்கும் பரவி வாழும் தமிழ் தொழிலதிபர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கும் “தி ரைஸ் – சங்கம்-5: மா மதுரை 2026” சர்வதேச மாநாடு மிகக் கோலாகலமாகத் துவங்கியது. மதுரை ஐடாஸ்கட்டர் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். தமிழ் மரபையும், நவீனத் தொழில் நுட்பத்தையும் இணைக்கும் பாலமாக அமையும் இம்மாநாட்டில், மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த மாமன்னர் திருமாறனின் திருவுருவப்படம் திறக்கப்பட்டதுடன், நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரை தேவருக்கும் சிறப்பான முறையில் மரியாதை செய்யப்பட்டது.

விழாவில் “21-ஆம் நூற்றாண்டு தமிழர் மரபணுவைச் சீர்மிகச் செதுக்குவோம்” என்ற தலைப்பில் ஆ.ராசா எம்.பி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அவர் பேசுகையில், தொல்காப்பியர் தொடங்கி வள்ளலார் வரை தமிழ்ச் சமூகம் வகுத்து வைத்த அறநெறிகள் மற்றும் வாழ்வியல் முறைகளைத் தற்காலத் தொழில் சூழலுக்கு ஏற்ப நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் வேலம்மாள் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், தமிழ் எகனாமிக் கவுன்சில் பொதுச் செயலாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் மிக முக்கியமான அம்சமாக, தமிழர்களின் பண்பாடு, மொழி மற்றும் மருத்துவத்தை உலகத் தரத்தில் முன்னெடுக்கும் “அனைத்துலக தமிழூர்” என்ற கனவுத் திட்டம் முறைப்படி வெளியிடப்பட்டது.

நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் அடுத்தடுத்த நாட்களில் உலகளாவிய தமிழ் ஊடகத் தாக்கம் குறித்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இரண்டாம் நாள் விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, கலைப்புலி எஸ்.தாணு, பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார். 55 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இம்மாநாட்டில், வர்த்தகக் கண்காட்சி, தகவல் தொழில்நுட்பம், மகளிர் தொழில்முனைவோர் சந்திப்பு மற்றும் நிதி நிபுணர்களுடனான கலந்துரையாடல் எனப் பல்துறை சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உலகத் தமிழர்களின் பொருளாதார வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு மாபெரும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

Exit mobile version