நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்தடுத்த கட்டமாக மலை, கடல், தண்ணீர் மாநாடுகள் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சியில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் முகாம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ? மனுக்களை வாங்கி சாக்கடை குழியில் போடும் நிலைதான் தற்போது நிலவும் திராவிட மாடல் ஆட்சி,” என்று குற்றஞ்சாட்டினார்.
துணை ஜனாதிபதி தேர்வு குறித்து அவர், “தமிழர், தெலுங்கர், கன்னடர் என்ற அடையாளம் கிடையாது. பாஜவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸின் கோட்பாட்டின் படியே செயல்படுகிறார்கள். ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக நிற்பதற்கான வாய்ப்பு இல்லை,” என்றார்.
திமுக குறித்து சீமான், “பாஜவின் கொள்கைகளுக்கு ஏற்றபடி ஆட்சி நடத்துவது திமுக அரசு தான். ‘ஆபரேஷன் சிந்தூரை’க்கு ஆதரவாக பேரணி நடத்தியது முதல்வர் ஸ்டாலினே. அப்போதே பாஜ கூட்டணியில் இருந்தார்கள், இப்போது காங்கிரஸோடு சேர்ந்திருக்கிறார்கள். அரசியல் லாபத்திற்காகத்தான் இப்படி பேசுகிறார்கள்,” என்று விமர்சித்தார்.
மேலும், “குஜராத் கலவரத்தை கருணாநிதி ஆதரித்தார். இப்போது கூட்டணியில் இல்லாததால் மணிப்பூர் கலவரத்துக்கு எதிராகப் பேசுகிறார்கள். பிரதமர் மோடியின் மரியாதையை ஸ்டாலின் சார்பாக ஏற்றுக் கொண்டதே திமுக – பாஜ நெருக்கத்திற்கான சான்று,” எனவும் குறிப்பிட்டார்.
விஜய் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, “நான் கூட்டணி அமைக்க சண்டை போடுபவன் அல்ல. காங்கிரஸ், பாஜ, திமுக, அதிமுக ஆகியோரே நாட்டின் பிரச்சினைகளுக்குக் காரணம். அவங்கோட கூட்டணியில் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது அவர்களின் முடிவு. அதைப் பற்றி நான் கருத்து சொல்லத் தேவையில்லை,” என்றார்.
பிரசார கட்டுப்பாடுகள் குறித்து, “அதிகாரங்களையே எதிர்த்து வந்ததால் 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடக்குமுறைகளுக்கே பயந்திருந்தால் நான் அரசியலில் இருக்க முடியாது,” என்று சாடினார்.
விமான நிலையத்திற்கு பெயர் சூட்டும் விவகாரம் தொடர்பாக, “முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரனார் என்று பல தரப்பினரின் கோரிக்கைகள் வரக்கூடும். ஆனால், பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் பிரச்சினையே இருக்காது,” எனவும் தெரிவித்தார்.
அடுத்தடுத்த மாநாடுகள் குறித்து சீமான், “தர்மபுரியில் மலை மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்தவுள்ளோம். ஐம்பூதங்கள் இல்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது,” என்று வலியுறுத்தினார்.