கன்னியாகுமரி : கள்ளக்காதல், குடும்ப தகராறு காரணமாக இளம் தாய்மார்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி வெளிப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரியில் 40 நாட்கள் ஆன குழந்தையை கொன்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள், திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு பெனிட்டா கர்ப்பமாகி, 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு தாயானார். கடந்த 9ம் தேதி இரவு, கார்த்திக் வேலை முடித்து வீடு திரும்பியபோது, குழந்தை அசையாமல் இருப்பதை கவனித்தார். காரணம் கேட்டபோது, “பால் குடிக்கும் போது தவறி விழுந்து காயமடைந்துவிட்டது” என மனைவி கூறினார்.
குழந்தையை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், மருத்தவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, கார்த்திக் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தபோது, குழந்தை இயற்கை மரணம் அல்ல, வாயில் பேப்பர் திணித்து கொலை செய்யப்பட்டதாக அதில் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார், பெனிட்டாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, “குழந்தை பிறந்த பிறகு கணவர் என்மீது அன்பு குறைத்துவிட்டார். எங்களது சந்தோஷத்திற்கு இடையூறாக குழந்தை தான் காரணம் என நினைத்தேன். அதனால் தான் வாயில் பேப்பரை திணித்து குழந்தையை கொன்றேன்” என்று பெனிட்டா ஒப்புக்கொண்டார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ஆசையில் சொந்தக் குழந்தையையே பலியிட்ட பெனிட்டா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.