திமுக ஆட்சியில் கூடுதல் ரேஷன் கடைகள்: ஒட்டன்சத்திரத்தில் புதிய பகுதிநேர கடையைத் திறந்து வைத்து அமைச்சர் சக்கரபாணி பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலப்பண்பட்டி ஊராட்சி, புதூர் கிராம பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர்களின் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடையைத் தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வசதிக்காகத் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடையைத் திறந்து வைத்த பின், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி அமைச்சர் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று மாநிலத்தில் ஒரு பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், கடந்த 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மொத்தம் 2,536 முழுநேர மற்றும் பகுதிநேர நியாய விலைக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 3,200-க்கும் மேற்பட்ட முழுநேர மற்றும் பகுதிநேரக் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது, மிகக் குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு அதிகப்படியான ரேஷன் கடைகளைத் திறந்து சாதனை படைத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கத் தொலைதூரம் சென்று பொருட்கள் வாங்கும் நிலையை மாற்றி, பகுதிநேரக் கடைகளை அதிகப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சி.இராஜாமணி, தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் P.C.தங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கா.தங்கராஜ் மற்றும் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர். தங்கள் கிராமத்திலேயே புதிய கடை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த புதூர் பகுதி பொதுமக்கள் அமைச்சருக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version