அறிவியல், மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத்தில் நவீன கண்டுபிடிப்பு

மதுரை யாதவா கல்லூரியின் சார்பில், “அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள நவீனப் புதுமைகள்” (Innovations in Science, Technology, Management and Public Health) என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நேற்று கல்லூரியின் கலை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலக நாடுகளின் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒரே தளத்தில் இணைக்கும் நோக்கில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாடத்திட்டக் குழுத் தலைவர் அழகப்பன் அனைவரையும் வரவேற்றார். பார்க் பிளாசா குழுமத்தின் நிறுவனர் கே.பி.எஸ். கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இன்றைய கல்வி முறையானது தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப எவ்வாறு மாற வேண்டும் என்பதையும், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினார்.

மாநாட்டின் முக்கிய அமர்வுகளில், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மேரிலாண்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் தினேஷ் சர்மா, அழகப்பா அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் அர்ஜூனன், தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயல் தலைவர் தர்மேந்திர யாதவ் மற்றும் பிலாஸ்பூர் அடல் பிஹாரி வாஜ்பாய் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் ஹோட்டா ஆகியோர் உரையாற்றினர். அவர்கள், “ஆராய்ச்சி மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் செயல்பாடுகளில் கணிதக் கோட்பாடுகள் (Mathematical Principles) எவ்வளவு அடிப்படைப் பங்காற்றுகின்றன” என்பது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தனர். மேலும், இன்றைய நவீன ஆராய்ச்சிகளில் தரவு பகுப்பாய்வு (Data Analysis) மற்றும் வளர்ந்து வரும் கணக்கீட்டு நுட்பங்களை (Computational Techniques) எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்த தொழில்நுட்பக் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில், கனடாவின் நிபிரிங் பல்கலைக்கழக இயக்குநர் சிவபிரசாத் ரவி சர்வதேச வணிகத்தில் வரிகளின் தாக்கம் மற்றும் அதன் எதிர்கால நிலை குறித்துப் பேசினார். மதுரை ஐ.சி.எம்.ஆர். (ICMR) அமைப்பின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி மாரியப்பன், தற்போதைய சூழலில் வெக்டார் மூலம் பரவும் நோய்கள் மற்றும் பொது சுகாதாரச் சவால்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் முருகன், அன்றாட மனித வாழ்க்கையில் கணிதத்தின் ஆழமான பயன்களைப் பற்றி விளக்கமளித்தார்.

இந்தச் சர்வதேச மாநாட்டில் கல்லூரித் தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல், துணை முதல்வர் கிருஷ்ணவேணி மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இறுதியாக, கல்லூரித் தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்க, மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

Exit mobile version