MLC T20: 51 பந்தில் 151 ரன்கள் ! கிறிஸ் கெய்லின் உலகச் சாதனையை உடைத்த ஃபின் ஆலன்

அமெரிக்கா :
அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 தொடர், ஃபின் ஆலன் அடித்த அதிரடி சதத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றது. டெக்சாஸ் கலிஃபோர்னியாவில் நடந்த தொடக்கப் போட்டியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய ஃபின் ஆலன், 51 பந்துகளில் 151 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்தார்.

ஒரு இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் – புதிய உலக சாதனை !

முன்னதாக கிறிஸ் கெய்லும், எஸ்டோனியாவின் சாஹில் சவுகானும் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக 18 சிக்ஸர்கள் விளாசியிருந்தனர். ஆனால், ஃபின் ஆலன் இந்த சாதனையை முறியடித்து 19 சிக்ஸர்களுடன் புதிய உலகச் சாதனையை பதிவு செய்தார்.

34 பந்துகளில் சதம் – புதிய MLC சாதனை

அவரது 34 பந்துகளில் அடித்த சதம், MLC தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட அதிவேக சதமாக கருதப்படுகிறது. இதற்கு முந்தைய சாதனையினை நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் அடித்திருந்தார்.

சான் பிரான்சிஸ்கோ அணிக்கு பெரும் வெற்றி

அலென் அதிரடிக்கேற்ப, சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவரில் 269 ரன்கள் குவித்தது. பதிலுக்கு களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 5 சிக்ஸர்களை விளாசினாலும், ஹாரிஸ் ராஃபும் ஹஸ்ஸன் கானும் தங்கள் பந்துவீச்சால் போட்டியை கட்டுப்படுத்தினர்.

வாஷிங்டன் அணி 13.1 ஓவரில் 146 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 123 ரன்கள் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ அணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக ஃபின் ஆலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Exit mobile version