கன்னட மொழியில் தவறான மொழிபெயர்ப்பு இடம் பெற்றுள்ளதாகக் கூறி, மெட்டா நிறுவனத்தின் மீது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதில், “மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில், கன்னட மொழிபெயர்ப்பு முற்றிலும் தவறாக இருக்கிறது. இது உண்மைகளைத் திருப்பிச் சொல்வதோடு, பொதுமக்களை தவறான வழியில் வழிநடத்தும் நிலையை உருவாக்குகிறது,” என தெரிவித்தார்.
மேலும், இது போன்ற தவறுகள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு மேலிடமான மெட்டா நிறுவனத்திற்கு, உடனடியாக திருத்தம் செய்யுமாறு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும், மொழிபெயர்ப்புப் பிழைகள் பெரும்பாலும் நிகழும் என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சித்தராமையா வலியுறுத்தினார்.
“இத்தகைய தொழில்நுட்ப அலட்சியங்கள், மக்களின் புரிதலும், நம்பிக்கையும் பாதிக்கக் கூடும்,” எனக் கடும் எச்சரிக்கையுடன் சித்தராமையா தனது கருத்தை தெரிவித்தார்.