சேலம் : சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரின் 16 வயது மகன், பிளஸ்-1 படிக்கும் மாணவன், டியூஷனுக்குச் சென்று வீடு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜெயகாந்தன், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், “டியூஷனுக்கு சென்ற என் மகன் வீடு திரும்பவில்லை” என தெரிவித்திருந்தார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது, மாணவன் மதுரையில் உள்ள நண்பரைச் சந்திக்கச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுரை செல்லும் பஸ்களில் பணிபுரியும் கண்டக்டர்களின் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, மாணவன் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவன் பஸ்சிலிருந்து மீட்கப்பட்டார். பின், சேலம் போலீசாரின் ஏற்பாட்டில், அவர் நேற்று தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.