காயத்திலிருந்து மீண்டு தங்கம் வென்றார் மீராபாய் சானு !

மணிப்பூரைச் சேர்ந்த இந்திய பளுதூக்கல் வீராங்கனை மீராபாய் சானு, அஹமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தில் முடித்திருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக ஓராண்டு காலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், இந்த சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.

மீராபாய் சானுவின் சாதனை :

ஸ்னாட்ச் – 84 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் – 109 கிலோ, மொத்தம் – 193 கிலோ, இதன் மூலம் முதலிடத்தைப் பிடித்த அவர், 2026-ல் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான நேரடி தகுதியையும் பெற்றார்.

இந்தியாவின் சுனில் டால்வி 177 கிலோ எடையுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். நைஜீரிய வீராங்கனை ரூத் அசோகுவோ நியோங் 167 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மீராபாய் சானு உருக்கமாக பேசியதாவது :
“அகமதாபாத்தில் தங்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு சொந்த நாட்டில் போட்டியிடுவது என்னை பெருமைப்பட வைத்துள்ளது. ரசிகர்களின் ஆதரவு, பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல், மற்றும் நாட்டின் ஊக்கமே இந்த வெற்றிக்கு காரணம். அக்டோபரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப்பிற்கு இது எனக்கு நம்பிக்கை தருகிறது” என்றார்.

ஆண்கள் பிரிவில் இந்திய வெற்றி :
அதே போட்டியில், ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் தேசிய சாம்பியன் ரிஷிகாந்த் சிங் தங்கம் வென்றார். அவர் ஸ்னாட்சில் 120 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க்கில் 151 கிலோ என மொத்தம் 271 கிலோ தூக்கி அசத்தியார்.

மலேசியாவின் ஐரீன் ஹென்றி 161 கிலோ எடையுடன் வெள்ளி, வேல்ஸின் நிகோல் ராபர்ட்ஸ் 150 கிலோ எடையுடன் வெண்கலம் வென்றனர்.

Exit mobile version