சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

திருவள்ளூர் :
திருவள்ளூரில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடித்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒரு கடையில் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 14 நாள் தேடலுக்கு பின், குற்றவாளி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கடந்த 25ஆம் தேதி ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 24 மணி நேரம் விசாரித்த போலீசார், 26ஆம் தேதி இரவு புழல் சிறையில் அடைத்தனர்.

போலீஸ் காவல் அனுமதி – சம்பவ இடத்தில் விசாரணை

திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றவாளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி உமா மகேஸ்வரி, 4 நாட்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு கவரைப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட ராஜுவிடம் விசாரணை நடைபெற்றது. இன்று அதிகாலை, சம்பவம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளியிடம், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் வைத்து விபரமான விசாரணை நடத்தப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. இது முழுமையாக வீடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ராஜுவை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இரண்டாவது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version