புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் சமூக நலத்திட்டங்களின் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.ரகுபதி, “தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னோடித் திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம், கல்வி மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் பணிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். குறிப்பாக, ‘கலைஞர் கனவு இல்லம்’ மற்றும் ‘முதலமைச்சரின் வீடுகள் மறுக்கட்டுமானத் திட்டம்’ ஆகியவற்றின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’, ‘நான் முதல்வன்’ மற்றும் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். ‘விடியல் பயணத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ போன்ற பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களின் பயன்கள் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதவிர, நபார்டு உதவியுடன் கட்டப்படும் பள்ளி கட்டிடங்கள், கிராமச் சாலைகள் மேம்பாடு மற்றும் ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ ஆகியவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.திருமால், வருவாய் கோட்டாட்சியர்கள் பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ப.கோகுல்சிங் (இலுப்பூர்), அபிநயா (அறந்தாங்கி) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். அரசின் திட்டங்களை எவ்வித காலதாமதமுமின்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அதிகாரிகளின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும் என அமைச்சர்கள் இறுதியாக எச்சரித்தனர்.

















