திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் பயின்று, டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி நியமனம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் உள்ள மாணவர்கள் இந்திய அளவிலும் மாநில அளவிலும் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டன்சத்திரத்தில் இந்த அதிநவீன இலவச பயிற்சி மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இம்மையத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்பட்ட தரமான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களின் பயனாக, தற்போது பிரீத்தி, சவுந்தரராஜன், வசந்தகுமார், கார்த்திகா, சம்பத்குமார், கருப்புசாமி, முகமது அபு சாலிக் ஆகிய ஏழு மாணவர்கள் அரசுப் பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி அவர்களது எதிர்கால அரசுப் பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த எளிய பின்னணி கொண்ட மாணவர்கள் அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே தங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.
இந்த பாராட்டு விழாவின் போது, ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு, அவைத் தலைவர் செல்வராஜ், பயிற்சி மைய ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். வரும் காலங்களில் இந்தப் பயிற்சி மையத்தின் மூலம் மேலும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
