‘குடுகுடுப்பைக்காரர் போல் அமைச்சர் ராஜா பேசுகிறார்’ – அன்புமணி குற்றச்சாட்டு

தொழில் துறை அமைச்சர் ராஜா பேசும் விதம், ‘குடுகுடுப்பைக்காரர்’ போல் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ.15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என அமைச்சர் ராஜா கூறியதையே குறிப்பிட்டு அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமைச்சர் ராஜா தொடர்ந்து பாக்ஸ்கான் முதலீடு உறுதி எனச் சொல்கிறார். ஆனால் அந்த முதலீடு எப்படிப் பெறப்படுகிறது, அதன் செயல்முறை என்ன என்பதைக் கூறவில்லை. அவர் கூறும் விதம், ‘நல்ல காலம் பொறக்குது’ எனக் கூறும் குடுகுடுப்பைக்காரரைப் போல் உள்ளது,” என அன்புமணி விமர்சித்துள்ளார்.

மேலும், “ஒரு அமைச்சராக ராஜா தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் பேச வேண்டும். ஜோதிடர்கள் போல ஆதாரமற்ற தகவல்களை வழங்கக் கூடாது. தொழில் முதலீடு என்பது மாட்டுச் சந்தை பேரம் போல ரகசியமாய் நடப்பது அல்ல; அதில் வெளிப்படைத்தன்மை அவசியம்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், “தி.மு.க. அரசு உண்மையிலேயே தொழில் முதலீடுகளை கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளை தாண்டி அதை வரவேற்பேன். ஆனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து வந்து, முதலீடுகள் குவிந்துவிட்டன என கதைகள் சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அன்புமணி கூறியுள்ளார்.

Exit mobile version